fbpx

KALARI FOREST SCHOOL

Article on Water

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உலகம் காண்பது தண்ணீர். “The World Watch” என்ற அமைப்பு நாம் வாழும் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பிரச்சனையாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. உலகின் 700 கோடி மக்களுக்கு தண்ணீரை சுகாதாரமாகவும், தடையின்றியும் கிடைக்கச் செய்ய ஒரேவழி என தனியார்மயத்தைச் சுட்டிக்காட்டுகிறது உலகசுகாதார நிறுவனம். தண்ணீர் என்பது மனித உரிமை அல்ல அது விலைக்கு விற்கக்கூடிய பண்டம் என்கிறது பன்னாட்டு அரசியலின் பொருளாதாரக் கொள்கை.

“விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்று வாழ்ந்த சமூகம் இன்று தண்ணீர் விற்கப்பட வேண்டிய பண்டம் என்று மனதளவில் ஏற்றுக்கொண்டது தான் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. ஆற்றல்களை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்பது இயற்பியல் விதி. இது இயற்கைக்கும் பொருந்தும். இந்த பூமியில் ஆண்டுதோறும் சுமார் 40000 கோடி லிட்டர் தண்ணீர் மழையாக பொழிந்து பின்னர் ஆவியாக மாறி மீண்டும் மழையாக பொழிந்து நீர் சுழற்ச்சியில் ஈடுபடுகிறது. உண்மையில் இந்த அளவு என்றைக்கும் இங்கே மாறவே இல்லை. மரபுசார் வேளாண்மைக்குப் பயன்படும் நீரும், நீர் நிலைகளில் தேங்கும் நீரும் இந்த சுழற்சியில் பிரதான பங்கு வகிக்கின்றன. இந்த நீரைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இது மீண்டும் பூமியில் கிடைக்கப்பெறும் நீர்.

ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின்னர் உற்பத்தித் துறையில் வளர்ச்சியை எட்ட போட்டிப் போட்டு, பந்தயக் குதிரைகளாக ஓடிக்கொண்டிருக்கும் தேசங்கள் தங்களின் சிதைந்து வரும் நீர்வளத்தைப் பற்றி புரிந்துகொள்ளவே இல்லை, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நீர் பயன்பாட்டுக்குப் பிறகு வேதிப்பொருளாகத்தான் வந்து சேர்கிறது. இது நன்னீருடன் கலந்து அதையும் மாசடைய வைத்து, நீரியல் சுழற்சியில் இருந்து விடுபட்டு வேதிப்பொருளாக தங்கி மீண்டும் பயன்பாட்டுக்கு வரமுடியாத நிலையை அடைகிறது.

பசுமைப் புரட்சிக்கு பின்னர் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவு அதிகரித்தும், இரசாயன வேதி உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுத்தன்மை அதிகரித்து நீராதாரங்களை பாதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக வயல்வெளிகளிலும், நீர் நிலைகளிலும் வாழும் பல்லாயிரம் பல்லுயிர்களை இந்த பூமி மிகச் சொற்ப காலங்களில் இழந்திருக்கிறது. இப்படி பல்வேறு புரட்சிகளுக்குப் பின்னர் நம் கண்ணை விட்டு மறைந்த ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர் நிலைகள் ஏராளம். இந்தியாவில் 75 விழுக்காடு ஆறுகள் குளிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியாத அளவில் மாசுபட்டுள்ளன.

ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 20 இலட்சம் குழந்தைகள் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துவதால் இறந்து போகின்றனர். இந்தியாவின் சில பகுதிகளில் தண்ணீர் எடுப்பதற்கு மட்டும் சுமார் 7 மணி நேரம் வரை தினமும் செலவிடும் பெண்கள் உள்ளனர். மத்திய மற்றும் வட மாநிலங்களில் தண்ணீர் எடுப்பதற்காக மட்டும் ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யும் வழக்கமும் உள்ளது. அவர்களை “தண்ணீர் மனைவி” என்றே அழைக்கின்றனர். அவர்களது வேலை தினந்தோரும் தண்ணீர் எடுப்பது மட்டுமே. இவ்வாறு தண்ணீர் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் இயற்கையாக நடந்தவை அல்ல என்பதே அதிர்ச்சிகரமான உண்மை.

தொழிற்புரட்சிக்கும் – உற்பத்திக்கும் – தண்ணீருக்குமான தொடர்பு மிக முக்கியமானது. ஒவ்வொரு பொருள் உற்பத்திக்கும் இன்றியமையாத மூலதனாம அமைவது தண்ணீர். உதாரணமாக ஒரு கிலோ கோதுமையை உற்பத்தி செய்ய 1000லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஒரு கார் தயாரிக்க 4 இலட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இந்த தண்ணீர் எல்லாம் அந்தந்த பொருட்களில் புலப்படாமல் மறைந்து உள்ளது. இந்த நீரை “மறை நீர்” என்று அழைக்கின்றனர்.

இந்த மறை நீர் தத்துவத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரு கிலோ கோதுமையை இந்தியா வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்போது அதனோடு மறைந்துள்ள 1000 லிட்டர் நீறையும் ஏற்றுமதி செய்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு பொருளின் மூலமாகவும் கடத்தப்படும் நீரின் அளவு என்ன என்பதை உணருவதே மறை நீர் விழிப்புணர்வு ஆகும்.

எந்த ஒரு பொருளின் சந்தைவிலையும் அதை தயாரிக்க பயன்பட்ட தண்ணீரின் மதிப்பை உள்ளடக்குவதில்லை. இப்படி ஒவ்வொரு பொருளின் மூலமாகவும் மறைமுகமாகவும் கடத்தப்படும் தங்களது நாட்டின் இயற்கை வளத்தையும் நீர் வளத்தையும் ஒவ்வொரு நாடும் உணரத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னமும் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பல நாடுகளில் புறக்கணிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இயற்கை வளங்களை சுரண்டும் தொழிற்சாலைகளை நிறுவுவது ஆபத்தானது.

தண்ணீரை தனியார் மயமாக்குவதன் மூலம் தண்ணீரை ஒரு போதும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. இது நிச்சயம் நடுத்தர மற்றும் ஏழை மக்களைப் புறந்தள்ளி அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்ககூடிய செயலகத்தான் அமையும் என்பதை பொலிவியா போன்ற நாடுகள் நமக்கு முன்னரே உணர்த்தியுள்ளன. சுகாதாரமான தண்ணீரை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

இனி வரும் ஆண்டுகளில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் நீராதாரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்பின் கீழ் 16,477 சிறு குளங்களும், 3,950 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ள மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் 5,276 குளங்கள் மழையை நம்பியும் 3,627 குளங்கள் நதி நீரைப் பெற்றும், 9,886 தனியார் குளங்களும் உள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டுன் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 32,202 நீர் நிலைகள் இருந்தன. தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 விழுக்காடு குளங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. எஞ்சி இருக்கும் நீராதாரங்களை பலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் நீர் வழிப்பாதைகளை, வாய்க்கல்களைத் தீர்வாரிப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நம்மால் நிச்சயம் தண்ணீர் வளத்தில் தன்னிறைவு பெற முடியும். அதை விடுத்து நீர் தாங்கும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு போன்ற எதிர் நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாதிப்பு நமக்கும் இனி வரும் தலைமுறைக்கும் தான். தொடர்ந்து அரசோடு இணைந்து பாழ்பட்டுள்ள நீராதாரங்களை அந்தந்த பகுதி மக்கள் காப்பாற்றத் தவறினால் இனி வரும் சமுதாயத்திற்கும் இதை விட மோசமான ஆபத்தை நம்மால் விட்டுச் செல்ல முடியாது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
English